தமிழ்நாட்டில் வார இறுதிநாளான இன்றும், நாளையும் கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வேலைக்காக இடம் பெயர்ந்துள்ளனர். அவ்வாறாக வேலைக்காக புழம்பெயர்ந்தவர்கள் தங்கள் வார இறுதி விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகிறார்கள். ஆனால், அதற்கேற்ப போதிய பேருந்து வசதி இல்லாத நிலை உள்ளது.
குறிப்பாக கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வார இறுதி நாட்களில் பயணிகள் கூட்டம் பேருந்து நிலையங்களில் அலைமோதுகிறது. இதனால் பேருந்துகள் கிடைக்காமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த பிரச்னையை நிவர்த்தி செய்யும் வகையில் பயணிகளின் வசதிக்காக வார இறுதி நாட்களான இன்றும் (ஜூலை 15) நாளையும் (ஜூலை 16) தினசரி இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து 300 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.







