குஜராத் டைட்டன்ஸ் உடனான போட்டியை வென்ற பிறகு, ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023 தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் நேற்று முதல் துவங்கிய நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடம் பிடித்தி ருந்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் குவாலிபயர் போட்டியில் விளையாடின.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு தேர்வு செய்த குஜராத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 172 ரன்கள் எடுத்தது. 173 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 10 ஆவது முறையாக ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. போட்டியில் வென்ற பிறகு பரிசளிப்பு நிகழ்வில் ஹர்ஷா போக்லேவுடன் தோனி பேசினார். அப்போது நடப்பு தொடருடன் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வெளியான தகவல் குறித்து அவரிடம் கேள்வி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி நேரடியாக விளக்கம் அளிக்காவிட்டாலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் தனது விளையாட்டு குறித்து உடனே முடிவு செய்ய மாட்டேன்.
எனக்கு முடிவெடுக்க இன்னும் 8, 9 மாதங்கள் இருக்கிறது. இப்போது ஏன் அதைப் பற்றி யோசித்து தலைவலியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வரும் டிசம்பரில் மினி ஏலம் நடக்க உள்ளது. விளையாடுவேனா அல்லது வேறு ஏதாவது பொறுப்பில் இருப்பேனா என்பது தெரியவில்லை. ஆனால், நான் எப்போதும் சி.எஸ்.கே அணியின் அங்கமாகவே இருப்பேன் என தோணி கூறியுள்ளார். தோனியின் இந்த பேச்சை கேட்டு, அடுத்த தொடரிலும் தோனி விளையாட வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









