குஜராத்தில் பிபா்ஜாய் புயலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 1,152 கர்ப்பிணிப் பெண்களில் 707 பேர் புயலுக்கு மத்தியில் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
கடந்த 10 நாட்களாக அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த பிபா்ஜாய் புயல் காரணமாக குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வந்தது. குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே பிபா்ஜாய் புயல் வியாழக்கிழமை இரவில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் பலத்த மழையும் பெய்தது.
நேற்று பிற்பகலில் டெல்லி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்தது. பிபர்ஜாய் புயலின் தாக்கத்தால், கட்ச்-செளராஷ்டிரா பகுதியில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும், 23 போ் காயமடைந்ததாகவும் தேசிய பேரிடா் மீட்புப் படை தலைமை இயக்குநா் தெரிவித்தாா்.
இந்த புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 கடலோர மாவட்டங்களில் இருந்து சுமாா் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 1,152 கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் 707 பேர் நேற்று முன்தினம் புயலின் போது குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
இதில் கட்ச் மாவட்டத்தில் சுமார் 348, ராஜ்கோட்டில் 100, தேவபூமி துவாரகாவில் 93, கிர் சோம்நாத்தில் 69, போர்பந்தரில் 30, ஜுனாகத்தில் 25, ஜாம்நகரில் 17, ராஜ்கோட் மஹாநகர்பாலிகாவில் 12, ஜுனாகத் முனிசிபல் கார்ப்பரேஷனில் 8, முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் மோர்பி மாவட்டத்தில் 1 குழந்தையும் பிறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.







