ஆதிபுருஷ்….. இந்த திரைப்படம் கிட்டதட்ட இந்த ஆண்டின் முதல் மாதத்திலிருந்து ரிலீஸ் தேதி தள்ளி தள்ளி போய் கடைசியாக ஜூன் 16ம் தேதி வெளியாகியுள்ளது. பல்வேறு வண்ணங்கள் பூசப்பட்டு, பல தடைகளை கடந்து திரையரங்குகளில் வெளியாகி உள்ள ஆதிபுருஷ், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.
ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து திரைக்கு வந்திருக்கிறது ஆதிபுருஷ் திரைப்படம். இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைஃப் அலி கான், லட்சுமணனாக சன்னி சிங், சீதையாக கிருத்தி சனோன், அனுமனாக தேவ்தத்தா நாகேவும் நடித்துள்ளனர். ஆனால் கதையில் ராமர், சீதை, ஆஞ்சநேயர், லட்சுமணன், ராவணன் போன்ற பெயர்களை ராகவன், ஜானகி, பஜ்ரங்க், சேஷூ, லங்கேஷ் என மாற்றியுள்ளனர். இதை பார்க்கும் போது அனைவருக்கும் தெரிஞ்ச பெயர்கள், தலைப்பு மற்றும் கதையை எதற்காக மாற்ற வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எழத்தான் செய்கிறது.
தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு 14 ஆண்டுகள் வனவாசம் செல்கிறார். உடன் சீதையும், லட்சுமணனும் செல்கின்றனர். ஒரு கட்டத்தில் ராமர் ஏதோ ஒரு பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார். அவரை காப்பாற்றும்படி லட்சுமணனுக்கு ஆணையிடுகிறாள் சீதா. அண்ணியின் ஆணையை ஏற்று ராமரை காப்பாற்ற லட்சுமணன் செல்கிறார். இந்த தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்த ராவணன் மாறு வேடத்தில் வந்து சீதையை கடத்தி செல்கிறார். இதன் பிறகு சீதையை காப்பாற்ற ராமர் என்ன செய்கிறார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.
இந்த கதையை புத்தகத்தில் படித்திருப்போம். இருந்தாலும் சீரியலாகவோ அல்லது படமாகவோ எடுக்கும் போது இன்னும் தனி கவனம் தேவைப்படுகிறது. அந்த காலத்தில் வெளி வந்த கர்ணன் உள்ளிட்ட புராண கதைகளின் படத்தின் எந்த ஒரு அனிமேஷனும் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால் இப்பொழுதும் அந்த படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
இந்த காலத்திற்கேற்ப ஆதிபுருஷ் படத்தை 3டி தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கி இருந்தாலும் அந்த அனிமேஷன் காட்சிகள் பெரிதும் பொருந்தவில்லை, துண்டாக தெரிகிறது. ராவணன், ராமரை கொல்ல பயங்கர சக்திகளை பயன்படுத்துகிறார். அந்த சக்தியை பயன்படுத்தும் காட்சிகள் எல்லாம் 3டி கண்ணாடியை தூசி தட்டி பார்க்க வேண்டி உள்ளது. கிராபிக்ஸ் படுமோசம். ஒரு சில இடங்களில் எதற்காக இந்த காட்சிகள் என்ற கேள்விகள் எழுகிறது. உதாரணமாக பாகுபலி படத்தில் போர் காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டிருந்தது. அந்த காட்சிகள் நம்மை திரும்ப திரும்ப பார்க்கத் தூண்டும். ஆனால் ஆதிபுருஷ் படத்தில் இடம் பெற்றிருக்கும் போர் காட்சிகள் வலவலவென இருப்பதுபோல் உணரவைக்கிறது.
கிராபிக்ஸ்
ஆதிபுருஷ் டீசர் வெளியான போது அதில் இடம்பெற்றிருந்த கிராபிக்ஸ் குறித்து கேலிகளும், கிண்டல்களும் சமூக வலைதளங்களை புரட்டிப்போட்டன. அதன் பிறகு ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து கிராபிக்ஸ் காட்சிகளை படக்குழுவினர் மாற்றியதாக தகவல்கள் வெளியாகின, இருந்தாலும் பிசிறு தட்டிதான் உள்ளது கிராபிக்ஸ்.
பாடல்கள், இசை, உடைகள்
ஆதிபுருஷ் படத்திற்கு சஞ்சித் பல்ஹாராவும் அங்கித் பல்ஹாராவும் இசையமைத்துள்ளனர். படத்தில் ராமர் தோன்றும்போது வரும் பிஜிஎம் மற்றும் ஜெய் ஸ்ரீ ராம் பாடல் தியேட்டரில் மாஸ் காட்டுகிறது. மற்றபடி பாடல்கள் மற்றும் இசை ஓகே ரகம் தான். உடைகள் தேர்வை பொருத்தமட்டில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.








