சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் உலக்கோப்பை இறுதிப் போட்டியில் மலேசியாவை 4-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி எகிப்து சாம்பியன் பட்டம் வென்றது.
உலக ஸ்குவாஷ் சம்மேளனம், இந்திய ஸ்குவாஷ் சம்மேளனம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்து உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ தனியார் வளாகத்தில் கடந்த 13 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரைத் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இதில் இந்திய அணி அரையிறுதியில் வெளியேறி ஏமாற்றம் அளித்தது.
இந்நிலையில் இறுதிப் போட்டியில் எகிப்து மற்றும் மலேசியா அணிகள் இன்று மோதின. முதலில் விளையாடிய எகிப்து வீராங்கனை கென்சி அய்மன் மலேசிய வீராங்கனை சின் யிங் இடம் 3-1 என தோல்வி அடைந்தார். அதன் பின்னர் விளையாடிய எகிப்து வீரர் அலி அபோ, மலேசிய வீரர் டேரன் பிரகாசம் உடன் மோதி அதிரடியாக விளையாடி 3-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.
மூன்றாவதாக விளையாடிய எகிப்தின் முன்னணி வீராங்கனை பைரோஸ், மலேசியாவின் ஐரா அஸ்மானுடன் விளையாடி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் மலேசியாவை 4-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி எகிப்து அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது







