தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக தனியார் மருத்துவக் கல்லூரி பேராசிரியரிடம் 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர், செல்வகுமார். இவர், சென்னை அருகே போரூர் எஸ் ஆர்எம்சி கல்லூரியில் 30 ஆண்டுகளாக மூளை நரம்பியல் துறை பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். அரசு வேலைக்கும் முயற்சி செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நண்பர் மூலமாக சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் 46 வயதான சசிகுமார், மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 48 வயதான நடராஜன் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.
சசிகுமார், விருகம்பாக்கம் நடேசன் காலனியில் உள்ள, அரசு உயர் அதிகாரிகள் குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்து, தங்கியிருந்துள்ளார். சொகுசு கார், கோட் சூட் , விலை உயர்ந்த ஆபரணங்கள் என பந்தாவாக வலம் வந்துள்ளார். தனக்கு டெல்லியில் உள்ள அரசு அதிகாரிகளை தெரியும் என்றும், கூறிவந்துள்ளார். இதனையடுத்து செல்வகுமார் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பதாக சசிகுமாரிடம் கூறியிருக்கிறார். அதற்கு சசிகுமார் தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர் பதவி இருப்பதாகவும், அந்த பதவியை பெறுவதற்கு பணம் செலவாகும் என்றும் கூறியுள்ளார் .
அவர் கூறியதை நம்பி, சிறுக சிறுக 70 லட்சம் ரூபாய், கொடுத்திருக்கிறார். வேலை குறித்து கேட்கும் போதெல்லாம் இழுப்பறி செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேற் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்த, செல்வகுமார் காவல்நிலையத்தில் நடந்த சம்பவங்களை கூறி புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த, காவல்துறையினர், சசிகுமா, நடராஜான் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
பிடிபட்ட இருவரும், டெல்லியில் உள்ள அரசின் அனைத்து துறை செயலர்கள், மற்ற மாநிலங்களில் பணியாற்றும் அரசு உயர் அதிகாரிகளை தங்களுக்கு தெரியும் என கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. சசிகுமார் மீது சேலம், பவானி, திருப்பூர், கருமந்துறை காவல் நிலையங்களில் 7 மோசடி வழக்குகள், ஒரு கொலை மிரட்டல் வழக்கு உள்ளது. நடராஜன் காவல் துறையில் பணியாற்றி, ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. சென்னை சுற்றுவட்டார பகுதியில் எத்தனை பேரிடம் மோசடி செய்துள்ளார்கள் எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







