நாங்கள் சட்டப்படி செல்வதால் எங்கு சென்றாலும் வெற்றி பெருவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனிநீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லாது என்றும், ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன்பு குவிந்து வாழ்த்து தெரிவிப்பதோடு, வெற்றி முழுக்கங்களை எழுப்பினர். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை நீதிபதிகள் வழங்கியுள்ளனர் என கூறினார்.
சட்டவிதிகள் படியே பொதுக்குழு நடத்தப்பட்டதால், சட்ட முறைப்படி செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா எவ்வாறு பொதுக்குழு கூட்டம் நடத்தினார்களோ? அதேபோல் தான் எடப்பாடி பழனிசாமியும் சட்டப்படி பொதுக்குழு கூட்டத்தை கூட்டினார் என விளக்கமளித்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரத்தை நீதிமன்றமே வழங்கியிருக்கிறது என தெரிவித்த அவர், நாங்கள் சட்டப்படி செல்வதால் எங்கு சென்றாலும் வெற்றி பெருவோம் என்றார். தங்களிடம் தர்மம், நியாயம் இருப்பதால் தர்மம் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
– இரா.நம்பிராஜன்








