நீட் விலக்கை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

நீட் விலக்கை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நீட் தேர்வில் மூன்றாவது முறையாக தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக…

நீட் விலக்கை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நீட் தேர்வில் மூன்றாவது முறையாக தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக தென்காசி மாவட்டம், குலசேகரமங்கலத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவி ராஜலட்சுமி ஏற்கனவே இரு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். இப்போது மூன்றாவது முறை. இந்த முறையும் அவரால் போதிய மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்றால், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு எவ்வளவு கடினமானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

நடப்பாண்டில் சென்னை சூளைமேடு தனுஷ், ஓசூர் முரளிகிருஷ்ணா, அரியலூர் நிஷாந்தி ஆகிய மூவர் ஏற்கனவே உயிரை மாய்த்துக்  கொண்டனர். ராஜலட்சுமி நான்காவது உயிரிழப்பு. வரும் 7-ஆம் தேதி நீட் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், இனியும்  உயிரிழப்புகள் நிகழாமல் அரசு தடுக்க வேண்டும். ஏற்கனவே பல்லாயிரம் முறை நான் கூறியவாறு நீட் விலக்கு தான் மாணவர்களின் உயிரிழப்புகளை தடுக்க ஒரே தீர்வு ஆகும். இதை புரிந்து கொண்டு நீட் சட்டத்திற்கு விலக்கு பெறுவதற்காக நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். மத்திய அரசு இதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.