புதுச்சேரி 3 பேர் கொலை வழக்கில் பிரபல ரவுடி உட்பட 7 பேர் கைது!

புதுச்சேரியில் நேற்று மூன்று இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரபல ரவுடி உட்பட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில், நேற்று காலை (பிப்.14) இரண்டு வாலிபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டும், மற்றொரு வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் கிடந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகடை காவல் நிலைய போலீசார், அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த இரண்டு வாலிபர்களின் உடல்களையும்,  உயிருக்கு போராடிய மற்றொரு வாலிபரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அந்த இளைஞரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை செய்யப்பட்ட நபர்கள் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தது மறைந்த பிரபல தாதா தெஸ்தானின் மகன் ரிஷித் என்பதும்,
மற்றொருவர் திடீர் நகரை சேர்ந்த தேவா என்பதும், மற்றொருவர் ஜெ.ஜெ நகரைச்
சேர்ந்த ஆதி என்பதும் தெரியவந்தது. மேலும் இந்த மூன்று பேரும் விடியற்காலை வரை அந்த பாழடைந்த வீட்டில் மது அருந்தியதாகவும், அப்போது அவர்களுடன் மது அருந்திய நபர்கள் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைத்தான்யா கொலை குறித்து போலீசாரிடம் கேட்டறிந்து, கொலையாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து போலீசார் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடியிருப்பு நிறைந்த பகுதியில் மூன்று இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவில் பிரபல ரவுடி சத்யா அவருடன் சஞ்சீவி, சாரதி, வெங்கடேசன் உள்ளிட்ட 7  பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர்களை கத்தி முனையில் கடத்தி சித்ரவதை செய்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ரவுடி சத்யாவுக்கு எதிர் கோஷ்டியான அஸ்வின், விக்கி கோஷ்டியில் தெஸ்தான் மகன் ரிஷித் செயல்பட்டு வந்துள்ளார். இந்த 2 ரவுடி கோஷ்டிகளும் ஒருவரை ஒருவர் பழி தீர்க்க காத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு சத்யா தனது நண்பர்கள் சிலருடன் கடற்கரை சாலையில் நடைபயிற்சி சென்றார்.

அப்போது ரிஷித், தேவா, ஆதி ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளனர். அவர்களை பார்த்த சத்யா, மோட்டார் சைக்கிளை நிறுத்தி என்னை கண்காணிக்கிறீர்களா? என கேட்டுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே ஆட்டுப்பட்டியை சேர்ந்த சிலரை பொருட்களுடன் வரும்படி சத்யா அழைத்தார். அவர்களும் மோட்டார் சைக்கிளில் அரிவாள், கத்தியுடன் அங்கு வந்தனர். அவர்கள் ரஷி உட்பட 3 பேரையும் கத்தி முனையில் மிரட்டி மோட்டார் சைக்கிளில் நடுவில் அமர வைத்து கடத்தி சென்றனர்.

நேராக ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு அவர்களை கொண்டு சென்றனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர்களை சித்ரவதை செய்து அரிவாளால் முகத்தை சிதைத்து வெட்டி கொலை செய்துள்ளனர் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நள்ளிரவில் டி.வி. நகர், ரெயின்போநகர் பகுதியில் அங்கும் இங்கும் மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் செல்லும் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த கேமரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள், அரிவாள் ஆகியவற்றை கைப்பற்றும் வேலையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.