அமோனியா வாயுக்கசிவால் 7 பேர் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே, இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையுமளிக்கின்றன.

உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு, சிகிச்சை பெற்று வரும் அத்தனை பேரும் முழு உடல் நலத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை மையமாகக் கொண்ட நமது மாநிலத்தில், கடந்த சில காலங்களாகவே தொழில் நடக்கும் பகுதிகளில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்வதும் அதனால் உயிர்பலிகள் உண்டாவதும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே, தொழிலாளர்களின் உயிர் காக்கும் வகையில் தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றனவா, அங்கே எதிர்பாரா விபத்துக்களைக் கையாளும் தொழில்நுட்பங்கள் உள்ளனவா உள்ளிட்டவைகளை உடனடியாக ஆய்வு செய்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.