வாக்காளர் ரகசியத்தைப் பாதுகாக்கவும், குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் வாக்களித்தவர்களை அடையாளம் கண்டு அவர்கள் பழிவாங்கப்படுவதைத் தடுக்கவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ‘டோட்டலைசர்’ கருவிகளை பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குப்பதிவின் போது குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தன என்பதை அறிந்துகொள்வதால், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் மற்றும் வாக்காளர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவதைத் தடுக்க வேண்டும். அதற்காக14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒன்றாக இணைத்து, மொத்தமாக வாக்குகளை எண்ணும் ‘டோட்டலைசர்’ கருவிகளை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கோரி யோகேஷ் குப்தா என்பவர் சார்பில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாய் மற்றும் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் ஆஜராகி, வாக்காளர்களின் தனிஉரிமையைப் பாதுகாக்கவும், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகளைத் தடுக்கவும் வாக்கு எண்ணிக்கைக்காக உலகளவில் டோட்டலைசர் முறை பயன்படுத்தப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் நிபுணர்கள், சட்ட ஆணையத்தின் 255-வது அறிக்கை, சட்ட அமைச்சகம் மற்றும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் என அனைத்துத்துறை நிபுணர்களும் இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். கடந்த 2018-ல் தேர்தல் ஆணையமே “டோட்டலைசர்களை அறிமுகப்படுத்தும் காலம் வந்துவிட்டது” என நீதிமன்றத்தில் கூறியிருந்தது. மேலும், தேர்தல் நடத்தை விதிகள் பிரிவு 169-ன் கீழ் மத்திய அரசு தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்து விதிகளைத் திருத்த முடியும் என்பதால், நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்ற வேண்டிய அவசியமில்லை மாறாக இதற்கு நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் மட்டுமே தேவை என தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த, தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடு, தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியபோது, 50% தேசியக் கட்சிகளும் 68% மாநிலக் கட்சிகளும் டோட்டலைசர் முறையை எதிர்த்தன. மத்திய அமைச்சர்கள் குழுவும் இத்திட்டத்தை நிராகரித்தது.
மேலும் படிவம் 17சி மூலம் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் சரிபார்க்கும் நடைமுறை, டோட்டலைசர் பயன்படுத்தினால் சாத்தியப்படாது. அதேபோல ஒப்புகை சீட்டு சரிபார்ப்பதிலும் சிக்கல்கள் ஏற்படும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும், தேர்தல் நடத்தை விதிகளில் சட்டப்பூர்வ திருத்தம் கொண்டுவரும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், காகித வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது, அவசரக் காலங்களில் வாக்குச் சீட்டுகளைக் கலந்து எண்ணும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அப்படியெனில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கும் அதே போன்ற தேர்வை முதற்கட்டமாக ஏன் பயன்படுத்தக் கூடாது? என கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், “டோட்டலைசர் கருவியை” முற்றிலுமாகத் நிராகரிக்காமல், அதில் உள்ள நடைமுறைச் சிக்ககல்களையே தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கைக்கு டோட்டலைசர் கருவிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாகத் தேர்தல் நடத்தை விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
டோட்டலைசர் முறையைக் கொண்டுவருவதில் ஏதேனும் தடைகளோ அல்லது தாக்கங்களோ ஏற்படுமா என்பது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் உரிய பரிந்துரையை மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும், அதனை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.




