தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, காப்பீடு திட்டம் 5 லட்சத்திற்கு 25 லட்சம் மாற்றப்பட்டுள்ளது பயன்படக்கூடிய நபருடைய உச்ச வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், “தற்போது என்ன உச்சவரம்பு இருக்கிறதோ அதை உச்சவரம்பு தான் தொடரும். ஒவ்வொரு ஆண்டும் காப்பீடு திட்டத்தை டெண்டர் போடுகிறோம். வருகிற ஜனவரி மாதம் புதிய டெண்டரின் போது 25 லட்சம் காப்பீடு திட்டம் நடைமுறைக்கு வரும் என்றார்.
இதன் பிறகு பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ”5 லட்சத்திலிருந்து 25 லட்சமாக காப்பீடு திட்டம் உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு செலுத்தக்கூடிய பிரிமியம் தொகை எவ்வளவு? அதற்காக செலுத்தப்படும் தொகை எப்போது செலுத்தப்படும் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், ஒரு நபருக்கு சுமார் 800 முதல் 900 வரை ப்ரீமியம் தொகை செலுத்துகிறோம். 5 லட்சத்திலிருந்து 25 லட்சமாக காப்பீட்டு திட்டத்தை அதிகரித்தால் 5 மடங்காக பிரிமியம் தொகை செலுத்த வேண்டுமா என்று ஒரு கருத்து வந்தது. ஆனால் காப்பீட்டு திட்டம் அந்த வகையில் செயல்படாது. 5 லட்சம் இருந்தால் கூட 5 லட்சம் வரை முழுமையாக பயன்படுத்துபவர்கள் குறைவாக தான் இருக்கிறது.
இப்போது 25 லட்சமாக உயர்த்தினாலும் அதனை முழுமையாக பயன்படுத்துபவர்கள் குறைவாக தான் இருப்பார்கள். ப்ரீமியம் தொகை 5 மடங்காக உயராது. டிசம்பரில் டெண்டர் முடிகிறது. ஜனவரில் புதிய டெண்டர் வரும், எவ்வளவு வரும் என்பது சட்டப்பேரவையில் நான் தெரிவிக்கிறேன் என்றார்.




