கவுன்சிலரின் கணவர் மீது நடவடிக்கை கோரி நாகூரில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

நாகூர் அருகே  சாக்கடையை சரியாக தூய்மை செய்யவில்லை என நகராட்சி கவுன்சிலரின் கணவர் அடித்து விரட்டி அவமரியாதை செய்ததாகக் கூறி தூய்மைப் பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை நகராட்சிக்குட்பட்ட நாகூரில் உள்ள…

நாகூர் அருகே  சாக்கடையை சரியாக தூய்மை செய்யவில்லை என நகராட்சி கவுன்சிலரின் கணவர் அடித்து விரட்டி அவமரியாதை செய்ததாகக் கூறி தூய்மைப் பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை நகராட்சிக்குட்பட்ட நாகூரில் உள்ள 10 நகராட்சி வார்டுகளில் 29 நிரந்தரம் மற்றும் 31 ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வரும்  நிலையில் கடந்த 14 ஆம் தேதி பணியாளர் ரமேஷ் என்பவர் சக ஊழியர்களுடன் நாகூர் பட்டினச்சேரி கிராமத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். பின்னர் பணியை முடித்து ரமேஷ் உணவருந்த சென்ற நிலையில், தூய்மை செய்த இடத்தை 4 ஆவது வார்டு கவுன்சிலர் அஞ்சலை தேவியின் கணவர் நாகரத்தினம் பார்வையிட்டுள்ளார்.

அப்போது உணவருந்த சென்றவரை போன் செய்து அழைத்து வார்டு கவுன்சிலரின் கணவர் நாகரத்தினம் அப்பகுதியில் சரியாக சாக்கடையை தூய்மை செய்யவில்லை எனக்கூறி தாக்கி அவமரியாதை செய்து விரட்டியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து நாகை நகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீதேவி நடவடிக்கை எடுப்பதாக கூறி அலைக்கழித்து வந்தாக தூய்மைப் பணியாலர்கள் தெரிவித்தனர். தற்போது அவா் பணிமாறுதலில் சென்ற நிலையில், சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாகூர் பேருந்து நிலையத்தில் உள்ள அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் ஒரு நாள் பணிக்கு செல்லாமல்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சுற்றுலா தளமான நாகூரில் தூய்மை பணிகள் நடைபெறாமல் தடைப்பட்டது.

—ரூபி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.