மின்சார வயர் அறுந்து விழுந்ததில் கூலித் தொழிலாளர்கள் ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள லங்காவணி டிப்பா என்ற கிராமத்தில் ஏராளமான இறால் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பண்ணைகளை இரவு பகலாக பாதுகாப்பதற்காக கூலித் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலும் ஒரிசாவை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு இறால் பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்த கூலித் தொழிலாளர்கள் ஆறு பேர் இரவு தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அந்த வழியில் உள்ள மின்சார கம்பி அறுந்து விழுந்தது. இதில் கூலித் தொழிலாளர்கள் ஆறு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








