2023ல் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வரும்- மத்திய அமைச்சர்

இந்தியாவில் 2023ல் 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.  பாரிஸில் நடைபெற்ற VivaTech2022 நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து…

இந்தியாவில் 2023ல் 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

பாரிஸில் நடைபெற்ற VivaTech2022 நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தொலைத்தொடர்பு என்பது டிஜிட்டல் நுகர்வுக்கான முதன்மை ஆதாரமாகும். தற்போது பயன்பாட்டில் 4G அலைக்கற்றை உள்ளது. 5G அலைக்கற்றை பயன்பாடுகள் குறித்த ஆய்வுகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. மார்ச் 2023 இல் 5G அலைக்கற்றை பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியா தனது 5G சேவைகளை தயார் செய்து வருகிறது ஆனால் அதைவிட முக்கியமானது இந்திய 5G தொழில்நுட்பத்தின் முக்கிய நெட்வொர்க்கை உருவாக்குவது. தற்போதைய 4ஜி சேவைகள் மூலம் சாத்தியமானதை விட 10 மடங்கு அதிக வேகத்தையும் திறனையும் 5ஜி நெட்வொர்க் வழங்கும்.

5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை மாதம் இறுதிக்குள் நிறைவடையும். இதுகுறித்து தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி, கூடிய விரைவில் 5G சேவைகளை கொண்டு வர முயற்சிப்போம். தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து ஏலத்திற்கு நல்ல பதில் கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

மேலும், பிரான்சில் UPI & Rupay கார்டை ஏற்றுக்கொள்வதற்காக NPCI, இன்டர்நேஷனல் மற்றும் பிரான்சின் லைரா நெட்வொர்க் ஆகியவற்றுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா ஒரு மாதத்தில் 5.5 பில்லியன் UPI பரிவர்த்தனைகளை செய்கிறது. பிரான்சுடனான இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தம் எங்களுக்கு ஒரு பெரிய சாதனையாகும் என தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.