50 ஆயிரம் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வில் பங்கேற்காதது குறித்து தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
3,225 தேர்வு மையங்களில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தனித் தேர்வர்களுடன் சேர்த்து மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதி வருவதாகவும், 46 ஆயிரத்து 870 ஆசிரியர்கள் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற முதல் நாள் மொழித்தாள் தேர்வை தமிழ்நாடு முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாமல் இருந்துள்ளனர். மேலும் நேற்று நடைபெற்ற ஆங்கில பாடத்திற்கான தேர்விலும் இதே அளவிலான எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
8.75 லட்சம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி வருகின்ற நிலையில் நடைபெற்று முடிந்த இரண்டு பாடங்களுக்கான தேர்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு முழுவதும் பங்கேற்காத நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
– யாழன்