தங்கக் கடத்தலில் நாட்டிலேயே கேரளா முன்னணி மாநிலமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தங்கக் கடத்தல் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. கேரள மாநிலம் இதில் முதலிடத்தில் உள்ளது. தமிழகமும், மகாராஷ்டிரமும் அதற்கடுத்தடுத்த நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்திற்கான இறக்குமதி வரி உயரும்போதெல்லாம் கோல்டு ஸ்மக்லிங் கும்பல்கள் அதிகரிப்பது வழக்கம். தற்போது இறக்குமதி வரி உள்ளிட்டவற்றோடு 18.45 சதவீதம் வரை தங்கத்திற்கு வரி விதிக்கப்படுகிறது.
இதையும் படிக்க: திருநங்கைகள் நடத்தும் முதல் தேநீர் கடை; ஆனந்த் மகேந்திரா வாழ்த்து
பயணிகள் விமானம் மற்றும் சரக்கு விமானங்கள் மூலமாக அதிக அளவில் தங்கம் கடத்தப்படுகிறது. சுங்கம் மற்றும் வருவாய் புலனாய்வுத் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்வதுடன், கடத்தல்காரர்களும் கைது செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தங்கக் கடத்தல் விவகாரம் குறித்து மாநிலங்களவை நியமன உறுப்பினர் சோனால் மான்சிங் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற தங்க கடத்தல் குறித்தும், இதில் உள்ள தேச விரோதக் கும்பல் குறித்த தகவலையும் கேட்டிருந்தார்.
இது குறித்து மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மாநிலங்களவையில் பதிலளித்துள்ளார். அதில், புது வழிகளில் தங்கம் கடத்தப்படுகிறது. சுங்கம் மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் கடத்தல்களை கண்டறிந்து வருகின்றனர். தங்கக் கடத்தல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மூன்று கும்பல்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்கள், உத்தரப்பிரதேசம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அதிக கடத்தல் நடைபெறும் மீதமுள்ள மாநிலங்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு கணக்கிடப்பட்டது.
கடந்த 2020 முதல் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி வரையில் நாடு முழுவதும் தங்க கடத்தல்கள் தொடர்பாக சுமார் 9, 869 வழக்குகள் பதிவு செய்து, 8, 956.49 கிலோ தங்கத்தை புலானய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில், இந்தக் காலக்கட்டத்தில் நாட்டிலேயே கேரளத்தில் அதிக அளவில் 2,611 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,869.29 கிலோ தங்கம் அந்த மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் இதே காலக்கட்டத்தில் 2,237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,317.43 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தங்க கடத்தலில் மூன்றாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் 1,417 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,125.38 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








