ஆரணியில் அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி, 5 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி-படவேடு நெடுஞ்சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே அரசு மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மதுபானக் கடையால், இளம் சிறார்கள் பாதிக்கப்படுவதாகவும், தினமும் மது குடித்துவிட்டு ரகளைகளில் ஈடுபடுவதாகவும், சண்டை சச்சரவுகள் அதிகமாக நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொடர்ந்து மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பல்வேறு கிராம சபைக் கூட்டத்திலும் இதுகுறித்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று நடுக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதி தலைமையில், கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அரசுப் பள்ளி எதிரே அமைந்துள்ள மதுபானக் கடையை அகற்ற பலமுறை வலியுறுத்தியும், அதனை அகற்ற டாஸ்மாக் நிறுவனம் முன்வராததால், கிராம மக்களின் கேள்விகளுக்கு தங்களால் பதில் கொடுக்க முடியவில்லை என்று கூறி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுகந்தி, ஏழுமலை, குணாநிதி, கீதா மற்றும் பரிமளா ஆகியோர், தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
தொடர்ந்து, ராஜினாமா கடிதத்தை நடுக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதியிடம் வழங்கிய அவர்கள், இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தையும் புறக்கணித்தனர். அதேபோல் பொதுமக்களும் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனர். இதையடுத்து, ஆரணி வட்டாட்சியர் ஜெகதீசன், மேற்கு ஆரணி பிடிஓ சவிதா ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மக்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் தொடர்ந்து கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து வருகின்றனர்.
நடுக்குப்பம் ஊராட்சியில் உள்ள 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்களில், 5 பேர் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.







