சட்டசபை தேர்தல் : புதுச்சேரியில் 89.08 சதவீதம் வாக்குப்பதிவு!

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு சதவீதம் வெளியாகி உள்ளது.

அசாம், கேரளம், புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவையொட்டி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 30 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக களம் காண்பதால் இங்கு கடும் போட்டி நிலவுகிறது. சுமார் 9.50 லட்சம் வாக்காளர்கள் நேற்று வாக்களிக்கின்றனர். கேரளத்தில் 140 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

அஸ்ஸாமில் 126 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்.23, 29ஆம் தேதியும் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இதயனிடயே நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. நேற்று பதிவான வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த நிலையில், புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு சதவீதம் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி (30 தொகுதிகள்) – 89.08 சதவீதம் வாக்குப்பதிவு
கேரளா (140 தொகுதிகள்) – 77.38 சதவீதம் வாக்குப்பதிவு
அசாம் (126 தொகுதிகள்) – 85.10 சதவீதம் வாக்குப்பதிவு

புதுச்சேரியில் வரலாறு காணாத அளவில் 89.08 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் கடந்த தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இம்முறை சுமார் 7 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.