கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிதி உதவி – ஆர்சிபி அறிவிப்பு!

பெங்களுருவில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஆர்சிபி-கேஎஸ்சிஏ அறிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணி முதன் முறையாக கோப்பையை வென்றது. இதனால் குஷியான ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று (ஜூன்.04) சின்னசாமி மைதானத்தில் வெற்றி பேரணி நடைபெற்றது.

இதில் ஏராளமான பெங்களூரு அணி ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். அத்துடன் பலர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனிடையே கூட்ட நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தினர்.

இதனிடையே கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். காயமடைந்த அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக ஆர்சிபி-கேஎஸ்சிஏ அறிவித்துள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக கே.எஸ்.சி.ஏ தலைமை நிதி அதிகாரி சிவாஜி லோகரே அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.