விஜய் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. ‘தெறி’ ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு?

விஜயின் ‘தெறி’ ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் ‘ஜன நாயகன்’ படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் CWC மோனிஷா ப்ளெஸி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ம் தேதி இப்படம் வெளியாக இருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தினால் வெளியாகவில்லை. இதற்கிடையே, அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா உள்ளட்டோர் நடிப்பில் வெளியான ‘தெறி’ படம் ஜன.15-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். ஆனால், பொங்கலுக்கு வெளியாகும் புதிய தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து படம் வருகிற 23-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்த நிலையில், தயாரிப்பாளர் தாணு வெளியிட்ட பதிவு விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த பதிவில், ’புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே வி கிரியேஷன்ஸ்(V Creations) நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு ‘தெறி’ திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு நாளை அறிவிக்கப்படும். நன்றி’ என்று தெரிவித்திருக்கிறார். இதனால் “தெறி” ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறதா? என்ற கேள்வி விஜய் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.