சென்னையில் நாளை நடைபெற உள்ள ஓபன் மகளிர் டென்னிஸ் தகுதி சுற்று போட்டியில் 2 தமிழ்நாடு வீராங்கனைகள் உட்பட 5 இந்திய வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனர்.
சென்னை ஓபன் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கில் வருகிற 12-ம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 18-ம் தேதி வரை ஒரு வாரம் நடைபெறும் இந்த போட்டியில் சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த போட்டிகளுக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மைதானம் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி சுற்று போட்டிகள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் உட்பட 5 இந்தியர்கள் தகுதி சுற்று போட்டியில் நாளை பங்கேற்க உள்ளனர். ருதுஜா போசலே, ரியா பாட்டியா, சௌஜன்யா பாவிசெட்டி,
சாய் சமர்த்தி மற்றும் லக்ஷ்மி பிரபா அருண்குமார் ஆகியோர் இந்தியா சார்பில் தகுதி சுற்றில் பங்கேற்கின்றனர்.
மேலும் இந்தியாவின் முதல் இரண்டு வீராங்கனைகளான அங்கிதா ரெய்னா மற்றும் கர்மான் கவுர் தண்டி ஆகியோர் முக்கியமான டிராவில் சேர முயற்சிப்பார்கள் என்று
அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் 3-ம் நிலை வீராங்கனை ருதுஜா போசலே 12-ஆம் நிலை வீராங்கனை என்-சுவோ லியாங்கை எதிர்கொள்வார். இந்தியாவின் 4ஆம் நிலை வீராங்கனையான ரியா பாட்டியா ஆறாம் நிலை வீராங்கனையான ஜஸ்டினா மிகுல்ஸ்கைட்டை எதிர்கொள்வார்.
இந்தியாவின் 5ஆம் நிலை வீராங்கனையான சௌஜன்யா பாவிசெட்டி 11ஆம் நிலை
வீராங்கனையான கியோகா ஒகாமுராவை சந்திக்கவுள்ளர். 24 வீரர்கள் தகுதிச் சுற்றில் உள்ள நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள், சாய் சம்ஹிதா சமர்த்தி மற்றும் லட்சுமி பிரபா அருண்குமார் ஆகியோரும் தகுதிச் சுற்றில் உள்ளனர்.
இதில், சம்ஹிதா இரண்டாம் நிலை வீராங்கனையான நவோ ஹிபினோவை
எதிர்கொள்கிறார், 16 வயதான லக்ஷ்மி பிரபா அருண்குமார் முதல் நிலை வீராங்கனை யுகி
நைட்டோவை எதிர்கொள்கிறார். வரும் திங்கட்கிழமை தொடங்கும் போட்டியின் முக்கிய
டிராவிற்கு, ஆறு தகுதிச் சுற்றுகளில் ஒன்றைப் பெற வீராங்கனைகள் இரண்டு தகுதிச்
சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது போட்டியின் விதியாக
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
– இரா.நம்பிராஜன்








