பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நாளை தொடங்குகிறது என உயர்க்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் சேர, சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், கடந்த ஆகஸ்ட் 25-ல் தொடங்கவிருந்த பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.
இதனிடையே செப்டம்பர் 7-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது. நாளை முதல் நவம்பர் 13 வரை 4 கட்டங்களாக பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

நாளை முதல் வரும் 12-ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வும், செப்டம்பர் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வும், அக்டோபர் 13 முதல் 15 வரை 3-ம் கட்ட கலந்தாய்வும், அக்டோபர் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 4-ம் கட்ட கலந்தாய்வும் நடைபெற உள்ளது. அனைத்து வகை கலந்தாய்வும் ஆன்லைனிலேயே நடைபெற உள்ளது.
கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்கள் தேர்வான நாளில் இருந்து ஒரு வார காலத்துக்குள் கட்டணம் செலுத்தி கல்லூரியில் சேர வேண்டும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒருவார கால அவகாசத்தில் கட்டணம் செலுத்தாவிட்டால், அந்த இடங்கள் காலியானதாக கருதப்பட்டு, அவற்றுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.
அனைத்து சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. நவம்பர் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை துணைக் கலந்தாய்வும், SCA – SC கலந்தாய்வானது நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளன.







