பால்பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஆவின் பால்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பை தொடர்ந்து கடந்த ஜூலை 18ம் தேதி முதல் தனியார் நிறுவனங்கள் பால் பொருட்களான தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை 15 சதவிதம் அளவிற்கு உயர்த்தி் விற்பனை செய்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனமும் இன்று முதல் தயிர், லஸ்ஸி, நெய் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை உயர்த்தியுள்ளதாக சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள விலை உயர்வு அறிக்கையில், ஆவின் தயிர் 100கிராம் 10ரூபாயிலிருந்து 12ரூபாயும், நெய் 1 லிட்டர் ஜார் 535 ரூபாயிலிருந்து 580 ரூபாயாகவும், 15 கிலோ நெய் டின் 8680 ரூபாயிலிருந்து 9680ரூபாயாகவும், 15 மில்லி நெய் பாக்கெட் 10 ரூபாயிலிருந்து 12ரூபாயாகவும், 1 கிலோ பிரிமீயம் தயிர் 100 ரூபாயிலிருந்து 120ரூபாய்க்கும், 200 மில்லி மேங்கோ லஸ்ஸி 23 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுச்சாமி வீடியோ மூலமாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2019ம் ஆண்டு முதல் பல முறை பால் பொருட்களுக்கான விலையானது வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தப்பட்ட நிலையிலும் பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை எனவும், உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.