கொரோனா, வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்டவற்றால் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் 5.61% மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை என்றும், மறு தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா, கல்வித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். நடைபெற்று வரும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாதது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிக்க: பெண்களுக்கு எதிரான வன்முறைகள்; மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ், தேர்வுக்கு யார் வரவில்லையோ? அவர்கள் வராதது குறித்த காரணம் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமான மாணவர்கள் வரவில்லை. 5.61% மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை. மாவட்ட ஆட்சியர்களும் எதனால் வரவில்லை என்ற காரணத்தை அறிய வேண்டும். மற்ற தேர்வுகளை எழுத மாணவர்கள் வரவேண்டும்.
ஏப்ரல் 10-ஆம் தேதி மீண்டும் பள்ளி மேலாண்மைக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. 10 ஆம் வகுப்புத் தேர்வில் பூஜ்ஜிய அளவில் ஆப்சன்ட் இருக்க வேண்டும் என இப்போதே பணியாற்றுகிறோம். மாணவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஷூக்கள் குடோனில் வைக்கப்பட்டுள்ளதை நானே பார்த்துள்ளேன். ஏன் கொடுக்கவில்லை என கேட்டு கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்.
சுமார் 38,000 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், அரசு உதவி பள்ளியைச் சேர்ந்த சுமார் 8,000 மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் சுமார் 1,000 பேர் தேர்வெழுத வரவில்லை. கொரோனா, வாழ்வாதாரம் பாதிப்பு, விழிப்புணர்வு இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் தேர்வெழுத வரவில்லை என்றார்.
-ம.பவித்ரா








