4வது நாளை கடந்த உண்ணா விரத போராட்டம் – டெல்லி அமைச்சர் அதிஷிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!

4வது நாளாக உண்ணா விரத போராட்டம் நடத்தி வந்த டெல்லி அமைச்சர் அதிஷிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் மாதக்கணக்கில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த மாநில அரசு அண்டை…

4வது நாளாக உண்ணா விரத போராட்டம் நடத்தி வந்த டெல்லி அமைச்சர் அதிஷிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் மாதக்கணக்கில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த மாநில அரசு அண்டை மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம், ஹரியானாவிலிருந்து டெல்லிக்கு கூடுதல் நீர் பெற்றுத்தர உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு வரும் நீரை, தடுக்கக் கூடாது என ஹரியாணா மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

எனினும் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கிறது. இவ்விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசை கண்டித்து, பாஜக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. டெல்லி அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த, ஹரியாணாவில் உள்ள தங்கள் ஆட்சியை பயன்படுத்தி, செயற்கையாக தண்ணீர் தட்டுப்பாட்டை உருவாக்குவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி  கூறுகையில், “ஹரியானா மாநில அரசு யமுனையில் இருந்து டெல்லிக்கு உரிய தண்ணீரை விடுவிக்கவில்லை. கடந்த ஜூன் 21ம் தேதி 110 மில்லியன் கேலன் (எம்ஜிடி) தண்ணீரை மட்டுமே அம்மாநில அரசு விடுவித்துள்ளது” என கூறினார்.

மேலும், டெல்லிக்கு உரிய தண்ணீரை விடுவிக்காத ஹரியானா மாநில பாஜக அரசை கண்டித்து, தெற்கு டெல்லியில் உள்ள போகலில் ‘ஜல் சத்தியாகிரகம்’ என்ற பெயரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அமைச்சர் அதிஷி கடந்த 21ம் தேதி துவக்கினார். 28 லட்சம் மக்களுக்கான தண்ணீரை ஹரியானா அரசு விடுவிக்கும் வரை தான் எதுவும் உண்ணமாட்டேன் என தெரிவித்த அமைச்சர் அதிஷி, 4வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தார்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் அதிஷிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக  எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக கூறிய ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறியதாவது..

“ டெல்லி அமைச்சர் அதிஷி 4நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. இதனால் அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு 43 ஆக குறைந்தது. அவரது உடல்நிலை மோசமடைவதற்குள் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனக்காக போராடவில்லை, டெல்லி மக்களுக்காக, டெல்லியின் தண்ணீர் தேவைக்காக போராடுகிறார்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.