BSNL 4ஜி சேவையை விரிவுபடுத்த 2020-21ம் ஆண்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வட சென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, 4ஜி சேவையில் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட BSNL பின்தங்கி உள்ளதா?, அதற்கான காரணம் என்ன? மற்றும் 4ஜி அலைக்கற்றை தாமதம் காரணமாக BSNL நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை மத்திய அரசு அறிந்துள்ளதா? அப்படியென்றால் அதற்கான காரணம் என்ன? 4ஜி தொழில்நுட்பம் வைத்துள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டி போடமுடியததால் இழப்பில் இருந்து BSNL நிறுவனத்தால் வெளியே வரமுடியாது என்பதையும் மத்திய அரசு கவனத்தில் எடுத்து கொண்டு உள்ளதா? 4ஜி சேவைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய தகவல் தொலைத்தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவ்சிஹ் சவுகான், இந்தியாவில் 8,637 base ட்ரான்ஸ்சீவர் ஸ்டேஷன் மூலம் வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்கு 4ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. தொலைதொடர்பு துறையில் கடுமையான போட்டி இருந்தாலும் கூட BSNL அதன் வாடிக்கையாளர் தளத்தை தொடர்ந்து தக்கவைத்து வருவதாகவும், BSNL நிறுவனத்தின் போட்டி காரணமாக மற்ற நிறுவனங்கள் தங்கள் சேவைகளின் கட்டணத்தை குறைத்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்
4ஜி சேவைகளை மேலும் விரிவுபடுத்த 2020-2021ம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ரூ.24,084 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.








