ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: எந்தெந்த பொருட்களுக்கு வரி குறைப்பு?

இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  செய்தியாளர்களிடம் விளக்கினார். 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லி விஞ்ஞான்…

இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  செய்தியாளர்களிடம் விளக்கினார்.

49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து செய்தியாளர்களிடம் பின்னர்  நிர்மலா சீதாராமன் விளக்கினார்.

அப்போது மாநிலங்களுக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையான 16,982 கோடி ரூபாயை இன்று விடுவிப்பது என இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய அரசு தனது சொந்த நிதி ஆதாரத்திலிருந்து இந்த தொகையை வழங்குவதாகவும் அவர் விளக்கம் அளித்தார். ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்புக்கு மாநிலங்களுக்கு ஐந்து வருட காலத்திற்கு இழப்பீடு முழுமையாக வழங்கப்பட்டு உள்ளது எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

டேக் டிராக்கிங் சாதனங்கள் அல்லது டியூரபுள் கண்டெய்னர்களில் பொருத்தப்பட்டிருக்கும் டேட்டா லாக்கர்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கும் முடிவும் 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த பொருளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 18 சதவீதத்திலிருந்து பூஜ்யம் சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

பென்சில் ஷார்ப்னர்களுக்கான வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்ட அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகம் பயன்பாட்டில் உள்ள ராப் எனப்படும் திரவ வெல்லத்தின் ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. பேக்கிங் செய்யப்படும் ராப் வெல்லத்திற்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமமாக குறைக்கப்பட்டுள்ளது. சில்லரை விற்பனையில் கொடுக்கப்படும் ராப் வெல்லத்திற்கு ஜிஎஸ்டி வரியை முற்றிலும் ரத்து செய்வது என 49வது ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.