தமிழ்நாட்டில் புதிதாக 4,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக 6 ஆயிரத்துக்கும் கீழாக பாதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில் ஐந்தாயிரத்துக்கும் கீழ் தொற்று குறைந்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 4,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 711 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 804 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 70 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றில் இருந்து 6 ஆயிரத்து 553 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 23 லட்சத்து 97 ஆயிரத்து 336 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 388 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையிலும் புதிதாக 291 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 363 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஈரோட்டில் 506 பேருக்கும் சேலத்தில் 318 பேருக்கும் கோவையில் 597 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 18 பேருக்கும் ராமநாதபுரத்தில் 19 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.







