சென்னையில் ஜனவரி 6-ஆம் தேதி, 45-வது புத்தக காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில், ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 45-வது சென்னை புத்தகக் காட்சி அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த புத்தக காட்சி குறித்து புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வயிரவன் மற்றும் செயலாளர் முருகன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர், கலைஞர் பொற்கிழி விருதுகள் புத்தக காட்சியில் வழங்கப்பட உள்ளதாகவும், கடந்த ஆண்டை போல 800 அரங்கங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தனர். ஜனவரி 6-ஆம் தேதி துவங்கும் புத்தக காட்சி ஜனவரி 23-ஆம் தேதி வரை தொடர்ந்து நடக்க இருகிறது.
வாரநாட்களில் மதியம் 3 முதல் இரவு 8.30 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரையும் புத்தகக் காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக் காட்சியில் மாணவர்களுக்கு அனுமதி இலவசம்; மற்றவர்களுக்கு ரூ.10 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








