இலவசங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற மாட்டோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது. நாம் தமிழர் கட்சி 234 கட்சிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வேட்பாளர் நேர்காணல் இன்று நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தற்போதுதான் உண்மையான தர்மயுத்தம் தொடங்கியிருப்பதாக தெரிவித்தார். வரும் 12ஆம் தேதி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்துடன் தேர்தல் பரப்புரையை தொடங்க இருப்பதாக தெரிவித்த அவர், அப்போது அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டார். இலவசங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.







