கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது. சாம்பல் புதனான இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியோடு கூடிய வழிபாடுகளும் நடத்தப்பட்டு நெற்றியில் சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் தங்களின் தவக்காலத்தை தொடங்கினர்.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகையும் முக்கியமான ஒன்று . சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்த 3-ம் நாளையே ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அதற்கு முன்னதாக இயேசு கிறிஸ்து சிலுவை சுமந்து சென்ற பாடுகளை நினைவு கூறும் விதமாக 40-நாட்கள் உபவாசம் அதாவது நோன்பு இருந்து தங்களது பாவங்களுக்காக மன்றாடி சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வர். இதனை கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்றும் கூறலாம்.
இந்த சிறப்பு தவக்காலத்தில் ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து, சகோதரத்துவத்துடன் வாழ்வதற்கும் பிறருக்கு தீங்கிழைக்காத வண்ணம் ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொண்டு வாழ வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு இந்த தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. மனிதன் மண்ணாக இருக்கிறான், மண்ணுக்குத் திரும்புவான் என்பதன் அடையாளமாகவே இந்த சாம்பல் பூசுதல் நடைபெறும். அதன் முதல் துவக்கமாக கடந்த ஆண்டு குருத்தோலை நாளில் வழங்கப்பட்ட குருத்தோலைகளை எரித்து தயாரிக்கப்பட்ட சாம்பலை, அருட்தந்தையர்கள் சிலுவை போன்று மக்களின் நெற்றியில் பூசி தவக்காலத்தை தொடங்கி வைப்பர்.
அந்த வகையில் தவக்காலத்தின் முதல் நாளான இன்று ஒவ்வொரு கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு, விபூதி பூசுதல் நடைபெற்றது. அதன்படி தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அதிகாலையிலேயே சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபாடுகள் செய்தனர். மேலும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டவர்களுக்கு அருட்தந்தையர்கள் நெற்றியில் சாம்பலால் சிலவை வரைந்து தவக்காலத்தின் முதல் நாளை துவங்கி வைத்தனர்.
அதேபோல் சென்னை பெசன்ட் நகர், மயிலாப்பூர், சாந்தோம் உள்ளிட்ட புகழ்பெற்ற தேவாலயங்களிலும் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு தவக்காலம் துவங்கி வைக்கப்பட்டது. மேலும் திருச்சி , தஞ்சாவூர் , கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் என்று சொல்லபப்டும் தவக்காலத்தின் முதல் நாள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
அதேபோல் திருநெல்வேலி பாளையங்கோட்டை சவேரியார் தேவாலயத்தில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில் சாம்பல் புதன் திருப்பலி நடைபெற்றது. இந்த சிறப்பு திருப்பலியில் ஆயர் நற்செய்தி வழங்கினார். தொடர்ந்து வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு சாம்பலால் சிலுவை வரைந்து தவக்காலத்தை தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்தவா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாரில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் இன்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நஸ்ரின் சூசை கலந்து கொண்டு கிறிஸ்தவர்களுக்கு நன்மை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் புதுச்சேரியிலும் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களான இருதய ஆண்டவர் ஆலயம், ரெட்டியார் பாளையம் புனித அந்திரேயா ஆலயம், மிஷன் வீதியில் உள்ள ஜென்மராகினி பேராலயம், வில்லியனூர் லூர்து மாதா தேவாலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை, புனித அந்தோணியார், அரியாங்குப்பம் மாதா கோயில் உள்ளிட்ட ஏராளமான தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாம்பலை பூசி தங்கள் தவக்காலத்தை தொடங்கினர். பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் தேவாலயங்களில் சிலுவை பாதை வழிபாடுகள் நடக்கும்.
கிறிஸ்த்தவர்களின் இந்த 40 நாள் தவக்காலத்தை தொடர்ந்து குருத்தோலை ஞாயிறும், அதன் பின்னர் வருகிற ஏப்ரல் 7-ந் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்பட உள்ளது. அதில் இருந்து 3-ஆம் நாள், ஏப்ரல் 9-ந் தேதி இயேசுகிறிஸ்து உயிர்ந்தெழுந்த உயிர்ப்பு பெருவிழா அதாவது ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா












