மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு 40 போலீஸார் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மியான்மார் நாட்டில் 50 ஆண்டுகள் இராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. இதற்கெதிராக ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கடுமையாக போராடி வந்தார். அதனையடுத்து எழுந்த மக்கள் போராட்டம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக மியான்மர் ராணுவம் குற்றம்சாட்டி அதிபர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு, தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. கடந்த 1ம் தேதி மியான்மர் நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில், அதிகாலையில் ஆங் சாங் சூச்சி உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு நாடு முழுவதும் ஓராண்டுக்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிக்ககோரியும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 40 காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.







