பூனேவில் 14 வயது சிறுமியை மிரட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சிறுமியுடன் ஒரு இளைஞர் ஃபேஸ்புக் மூலம் நண்பர் ஆகியுள்ளார். பின்னர் சில தினங்களுக்கு பின்னர் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர். புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் தனது உண்மை முகத்தை காண்பித்த அந்த இளைஞர், தனது விருப்பத்திற்கு இணங்கவில்லை என்றால் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து விடுவேன் என மிரட்டி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும் தொடர்ந்து இதைப்போல புகைப்படத்தை காட்டி மிரட்டி சிறுமியை தனது விருப்பத்திற்கு பணிய வைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சிறுமிக்கு போன் செய்து அழைத்து விடுதியில் அறை எடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமையும் செய்து, அதை வீடியோவாக பதிவுசெய்துள்ளார். பின்னர் இதுகுறித்து வெளியே கூறினால் வீடியோவை வெளியிடுவது மட்டுமில்லாமல் உனது தந்தையையும் கொலை செய்துவிடுவோம் என அந்த கும்பல் மிரட்டியுள்ளது. மேலும் இதைப்போல கடந்த இரண்டு ஆண்டுகளாக 5 பேர் கொண்ட அந்த கும்பல் சிறுமியை தொடர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு காவல்நிலையம் சென்ற சிறுமி இது குறித்து புகார் அளித்துள்ளார்.
சிறுமியின் புகாரின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்து போக்ஸோ மற்றும் 376வது சட்டப் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரையும் போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.







