ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் | ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கோரி நயினார் நாகேந்திரன் மனு!

ஓடும் ரயிலில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்,  நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கோரி மனு அளித்துள்ளார்.  தேர்தல் விதிமுறை அமலில்…

ஓடும் ரயிலில் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்,  நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கோரி மனு அளித்துள்ளார். 

தேர்தல் விதிமுறை அமலில் இருந்த பொழுது தாம்பரம் ரயில்நிலையத்திற்கு வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அந்த தகவலின் படி தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனையிட்டனர். அப்போது எஸ் 7 கோச்சில் 3 நபர்கள் 6 பைகளில் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து 3 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களை தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.  அப்போது அந்த மூன்று நபர்களும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஓட்டலில் வேலை செய்வதாகவும்,  இந்த பணம் தேர்தல் செலவுக்காக அவர் எடுத்து வர சொன்னதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக,  நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் தாம்பரம் காவல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் இன்று ஆஜராகவில்லை.  நயினார் நாகேந்திரின் வழக்கறிஞர்களில் ஒருவரான ஜெய்கர் டேவிட்,  தாம்பரம் ஆய்வாளர் பால முரளியை சந்தித்து மனு அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.