நடிகர் விஷால் வீட்டைத் தாக்கிய 4 பேர் கைது

நடிகர் விஷால் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகரும் தயாரிப்பாளருமான விஷாலின் வீடு, சென்னை அண்ணாநகர் டி பிளாக்கில்…

நடிகர் விஷால் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்த சம்பவம்
தொடர்பாக 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகரும் தயாரிப்பாளருமான விஷாலின் வீடு, சென்னை அண்ணாநகர் டி பிளாக்கில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷால் வீட்டின் வெளியே, முதல் மாடியில் இருக்கும் படிக்கட்டில் அமைத்துள்ள கண்ணாடியினை, சிவப்பு நிற மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்த மர்மநபர்கள் சிலர், கல்லால் அடித்து உடைத்து விட்டு தப்பியோடினர்.

இதனையடுத்து அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் விஷாலின் மேலாளர் அரிகிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விஷால் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் சென்னை, கொளத்தூர், சந்தோஷ் நகரைச் சேர்ந்த மீன் ஏற்றுமதி தொழில் செய்து வரும் பிரவீன்குமார், அண்ணாநகர் வசந்தம் காலனியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சபரீஸ்வரன், புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் மணிரத்னம் மற்றும் அண்ணாநகரைச் சேர்ந்த மீன்வியாபாரி ராஜேஷ் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் நால்வரையும் நேற்று போலீசார் கைது செய்து விஷால் வீட்டில் கல் வீசியது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

குடிபோதையில் காரில் சென்ற போது நான்கு பேருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதன் காரணமாக, ஒருவரை ஒருவர் கல்லால் தாக்கிய போது, அதில் ஒரு கல் எதிர்பாராதவிதமாக நடிகர் விஷால் வீட்டின் மீது பட்டதாக நான்கு பேரும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.