சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’பிரின்ஸ்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்துள்ளார். படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ளது.
நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரேம்ஜி இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இத்திரைப்படத்தில் இடம்பெறும் ’பிம்பிலிக்கி பிலாப்பி’ மற்றும் ‘ஜெசிக்கா’ ஆகிய பாடல்கள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. பலரது பிளேலிஸ்டில் ஒலித்துக் கொண்டிருக்கும் இப்பாடல்கள் யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றுள்ளது.
இத்திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் குஷியான சிவகார்த்திகேயனின் ரசிகர்கள், இந்த தீபாவளி ’பிரின்ஸ் தீபாவளி’ என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் டான் பெரும் வெற்றி பெற்றதையடுத்து, பிரின்ஸ் திரைப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.







