சென்னை பெருநகரின் 3-வது முழுமை திட்டம் – மக்களின் கருத்து கேட்பு முறைப்படுத்தப்படுமா?

உலக வங்கியின் நிதியின் மூலம் மூன்றாவது முழுமை திட்டம் செயல்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட உள்ளது. இரண்டாவது முழுமை திட்டம் 2026 இல் முடிவடைய உள்ள நிலையில் 2027 முதல் 2046 வரை அடுத்த 19…

உலக வங்கியின் நிதியின் மூலம் மூன்றாவது முழுமை திட்டம் செயல்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட உள்ளது. இரண்டாவது முழுமை திட்டம் 2026 இல் முடிவடைய உள்ள நிலையில் 2027 முதல் 2046 வரை அடுத்த 19 ஆண்டுக்கான சென்னை பெருநகர வளர்ச்சியின் மூன்றாவது முழுமை திட்டம் மற்றும் அதற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

 

சென்னை பெருநகரின் முதல் முழுமை திட்டம் 1976 ஆம் ஆண்டும், இரண்டாம் முழுமை திட்டம் 2008 ஆம் ஆண்டும் தயாரிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் அதன் அடிப்படையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதல் முழுமை திட்டத்தில் சென்னை பெருநகரோடு ஆவடி, மீஞ்சூர், எண்ணூர், மணலி, ஆலந்தூர், தாம்பரம் உள்ளிட்டவை இணைக்கப்பட்டு நகரத்தின் நெரிசலைக் குறைக்கவும், மாநில மற்றும் பெருநகர அளவில் பொருளாதாரத்தை அதிகரிக்கவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

இரண்டாம் முழுமை திட்டத்தின் மூலம் எதிர்கால சந்ததியினர் வாழக்கூடிய, பொருளாதார ரீதியாக துடிப்பான, சுற்றுச்சூழலுக்கு நிலையான மற்றும் சிறந்த சொத்துகளுடன் சென்னையை முதன்மையான பெருநகரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடனே கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் குத்தும்பாக்கம் உள்ளிட்ட நகரங்களில் புதிய பேருந்து நிலையங்கள், கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலைய திட்டங்கள், உள்வட்ட மற்றும் வெளிவட்ட சாலைகள், மஞ்சம்பாக்கத்தில் டிரக் முனையம் என பல்வேறு திட்டங்கள் உள்ளடக்கப்பட்டன.

 

இவ்வாறாக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கணக்கிட்டு தயாரிக்கப்படும் சென்னை பெருநகரின் மூன்றாவது முழுமை திட்டத்தை தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை பெருநகரின் கடந்த இரண்டு முழுமை திட்டங்களும் அதிகாரிகள் அளவில் மட்டுமே திட்டமிடப்பட்ட நிலையில் மக்களின் நேரடி கருத்துகளை வலைத்தள வாயிலாக கேட்கிறது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்.

cmavision.in என்ற வலைத்தளம் மூலம் பெருநகரின் வளர்ச்சி அடுத்த 2047 ஆம் ஆண்டு வரை எப்படி உருவாக வேண்டும் என்ற முக்கிய கருத்துகளை பொதுமக்கள் நேரடியாக தெரிகிவிக்கலாம். அச்சரப்பாக்கம் முதல் அரக்கோணம் வரை சென்னை பெருநகரம் விரிவாக்கம் செய்யப்படலாம் என்றும் சென்னை மாநகரில் அண்ணாசாலை உட்பட பத்துக்கும் மேற்பட்ட முக்கிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த தகவல்களை நேற்று மூன்றாம் முழுமைத் திட்டத்திற்கான தொடக்க பயிலரங்கத்தில் அமைச்சர்கள் தாமோ அன்பரசன் மற்றும் முத்துசாமி தெரிவித்துள்ளனர்.

 

சுற்றுச்சூழல், பொருளாதாரம், போக்குவரத்து, காலநிலை மாற்றம், இயற்கை பேரிடர், ஆக்கிரமிப்பு, தொழில் வளர்ச்சி என பல்வேறு அம்சங்கள் நிறைந்தவையாக சென்னை பெருநகரின் மூன்றாம் முழுமை திட்டம் சிட்னி, சிங்கப்பூர், மேன்செஸ்டர் போன்ற நகரங்களுக்கு ஒத்த வகையில் தயாரிக்கப்படும் என சிஎம்டிஏ தெரிவித்துள்ளது.

 

முழுமைத் திட்டத்தை தயாரிக்க முதன்முறையாக மக்களின் நேரடி கருத்துக்களை வலைத்தளம் வாயிலாக கேட்கும் சிஎம்டிஏ அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களும் வலைத்தளம் வாயிலாக மட்டுமே பெறப்பட்டுவிடுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும் சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட 28 சட்டமன்றத் தொகுதிகளிலும் கருத்து கேட்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உகந்த வகையிலும் திட்டங்கள் வகுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும மாற்றுத்திறனாளிகள், மீனவர்கள், மூன்றாம் பாலினத்தவர், சாலையோர வியாபாரிகள், பட்டா இல்லாத மக்கள், சேரியில் வசிப்போர் என பல்வேறு வகையான சமூக மக்களுக்கும் இந்த மூன்றாம் முழுமை திட்டம் மூலம் நல்ல எதிர்காலம் கிடைக்குமா என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திட்டத்தின் தொடக்கப் பயிலரங்கத்திலேயே மாற்றுத்திறனாளிகள்,மூன்றாம் பாலினத்தோர்,சாலையோர, சேரி மக்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட சங்கத்தின் பிரதிநிதிகளை சிஎம்டிஏ அழைக்காமல் இருப்பதிலிருந்து இந்த கேள்வி தொடங்குகிறது.

 

அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை வகுக்கும்போது அடித்தட்டில் இருந்து தொடங்க வேண்டும். அந்த வகையில் சிஎம்டிஏ சார்பில் கேட்கப்படும் இந்த கருத்து கேட்பு முறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. மூன்றாம் முழுமை திட்டம் மூலம் ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக கண்காணித்து தவிர்க்க வேண்டும் என நேற்றைய தொடக்க பயிலரங்கத்தில் அமைச்சர் தாமோ அன்பரசன் பேசியுள்ளார். ஆனால் சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு 80 சதவீதம் நீர் நிலைளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியதே காரணம் என சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எனவே முழுமை திட்டத்திற்காக முதன்முறையாக கேட்கப்படும் மக்களின் கருத்துக்கள் அனைத்து தரப்பு சமூக மக்களிடமிருந்து பெறப்படுவதை சிஎம்டிஏ உறுதி செய்திட வேண்டும்.

 

-ஹரி நிஷாந்த்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.