வங்கதேச அணியின் கேப்டனாகும் ஷகிப் அல் ஹசன்…!

தமீம் இக்பால் வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து, ஷகிப் அல் ஹசன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.   ஆசியக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆகஸ்ட் 31 முதல்…

தமீம் இக்பால் வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து, ஷகிப் அல் ஹசன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெற உள்ளது. அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரின்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தமிம் இக்பால் அறிவித்து அதிர்ச்சியளித்தார். பின்னர், பிரதமர் ஷேக் ஹசீனாவுடனான சந்திப்புக்கு பிறகு தனது ஓய்வு முடிவை அவர் திரும்பப் பெற்றார்.

ஆனால் தமீம் இக்பால் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் வரவிருக்கும் ஆசிய கோப்பையிலிருந்து வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவு செய்ததாக அண்மையில் அறிவித்தார். மேலும் அணியின் ஒரு வீரனாக தனது பணியை சிறப்பாக செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஷகிப் வங்கதேச அணியின் டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஷகிப் அல் ஹசன் வங்கதேச அணிக்காக இதுவரை 52 ஒருநாள், 19 டெஸ்ட் மற்றும் 39 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம், “ஷகிப் அல் ஹசனை ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டிகளுக்கான வங்கதேச அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி நாளை அறிவிக்கப்படும். அணி தேர்வுக் குழுவினர் 17 பேர் கொண்ட வங்கதேச அணியை தேர்ந்தெடுக்க உள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷகிப் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் தற்போது வங்கதேச அணியை மூன்று வடிவிலான போட்டிகளிலும் அவர் வழிநடத்த உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.