நெல்லையில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மூன்று காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதி காவல்நிலையங்களில் விசாரணைக்குச் சென்றவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டு கொடிய சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிபிசிஜடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மூன்று காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளராக இருந்த ராஜகுமாரிக்கு குற்றாலம் காவல் ஆய்வாளராக பணி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : செல்போனுக்காக 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வீணடித்த அரசு அதிகாரி – சத்தீஸ்கரில் சர்ச்சை சம்பவம்!!
விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளராக இருந்த பெருமாளுக்கு கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி ஆய்வாளராக பணி ஒதுக்கப்பட்டுள்ளது. உளவுப் பிரிவு காவல் ஆய்வாளராக இருந்த கோமதிக்கு மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களில் காவல் ஆய்வாளர் ராஜகுமாரி மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.







