இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது 20 ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது போட்டி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 208 ரன்கள் குவித்தும் வெற்றி பெற முடியவில்லை. ஹர்திக் பாண்ட்யா (71 ரன்), லோகேஷ் ராகுல் (55 ரன்), சூர்யகுமார் யாதவ் (46 ரன்) ஆகியோரின் பேட்டிங் பிரமாதமாக இருந்தது. ஆனால் இறுதிகட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமாரும், ஹர்ஷல் பட்டேலும் ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு வித்திட்டது.
ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆவலில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் கேமரூன் கிரீனும் (61 ரன்), மேத்யூ வேட்டும் (45 ரன்) இந்திய பந்து வீச்சை விளாசி தள்ளினர். அதே சமயம் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்துடன் பதிலடி கொடுக்க தயாராக இருக்கும் என்பதால் இன்றை போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இன்று மாலை 7 மணிக்கு நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பந்துவீச்சில் பின்னடைவை சந்தித்திருக்கும் இந்திய அணியில் இன்றைய தினம் பல்வேறு மாற்றங்கள் இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த போட்டியில் இந்திய அணியில், லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல் அல்லது அஸ்வின், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ் அல்லது பும்ரா அல்லது தீபக் சாஹர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா அணியில், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கேமரூன் கிரீன், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் ஒயிட், மேத்யூ வேட், கம்மின்ஸ், ஹேசில்வுட், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.