முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாற்றுக்கு நாம் சொந்தக்காரர்கள்:அமைச்சர் தங்கம் தென்னரசு

இந்தியா முழுமைக்கும் தமிழகத்தின் பண்பாட்டு விழுமியங்கள் எதிரொலிக்கும் வகையில் சங்கமம் நிகழ்ச்சியை எடுத்துச் செல்ல வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் “கலைச் சங்கமம்” தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இதில் தொழில் துறை மற்றும் தமிழ் ஆட்சிமொழி – கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், அருங்காட்சியகங்கள் துறை பொறுப்பு இயக்குநர் சந்தீப் நந்துரி, கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் காந்தி ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், நாட்டியம் – இசை – நாடகக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

கலைச் சங்கமம் தொடக்கவிழா மட்டுமின்றி, சென்னை மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட கலை விருதுகள் வழங்குதல், இளைஞர்களுக்கான கலைப்போட்டியில் வெற்றிபெற்ற இளம் கலைஞர்களுக்கு பரிசு வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டது.

 

கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மாவட்டக் கலை மன்றங்கள் வாயிலாக கலைத்துறையில் சாதனைப்படைத்த
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு “கலை இளமணி” விருதும்,
19 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு “கலை வளர்மணி” விருதும்,
36 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு “கலைச்சுடர்மணி” விருதும்,
51 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு “கலை நன்மணி” விருதும்
66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு “கலை முதுமணி” விருதும் வழங்கப்பட்டன. இவற்றை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.

விழா முன்னிலை உரையாற்றிய முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், ” தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை வளர்க்கும். வகையில் மக்களிடையே கொண்டு செல்லவும், கலைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவும் வகையிலும் கலைச் சங்கமம் தொடங்கப்படுகிறது. அதன்படி சென்னையில் 123 கலை நிகழ்ச்சிகளும், இதர மாவட்டங்களில் 37 நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இதனை தொடரும் வகையில் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

சிறப்புரையாற்றிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “கடந்த பல ஆண்டுகளாக கலைத்துறையினருக்கு வழங்கப்படாமல் இருந்த விருதுகள் தற்போது, முதலமைச்சரின் வழிகாட்டுதலில் வழங்கப்பட்டு வருகிறது. கண்டு கொள்ளப்படாமல் இருக்கும் துறைகள் எல்லாம் தட்டி எழுப்பப்பட்டு, சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலைச் சங்கமம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” என்றார்.

விழா பேருரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “2 ஆண்டுகாலம் கொரோனா பெருந்தொற்றால் என்னென்ன தொழில்கள் பாதிக்கப்பட்டது குறித்து நாங்கள் கணக்கெடுத்து பார்த்தோம். அப்போது கலைத்துறையினர் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதை உணர முடிந்தது. எனவே முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள், நாம் பல துறைகளைச் பாதிப்பில் இருந்து மீண்டுவர பல நடவடிக்கைகளை செய்கிறோம். அதேபோல கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் நடன – நாடக – இசைக் கலைஞர்களையும் பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் எனக் கூறினார். அதன் அடிப்படையில் தான் இந்த “கலைச் சங்கமம்” என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழ்நாட்டுக்கென்று நீண்டநெடிய வரலாறு உண்டு. கலை, பண்பாடு, கலாச்சாரம் நம்முடைய விழுமியங்கள் இவற்றை எல்லாம் போற்றிப் பாதுகாத்து வரும் மரபுக்கு நாம் சொந்தக்காரர்கள். நம்முடைய வரலாறு ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்குள் அடங்குவது அல்ல. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டின் இசை, இலக்கிய – பண்பாட்டு வரலாற்றை எடுத்துக் கொண்டால், பிரிக்க முடியாத 2 ஆயிரம் ஆண்டுகள் கொண்ட வரலாற்றுக்கு நாம் சொந்தக்காரர்கள். அதனை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தான் வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் நம்முடைய கலை வடிவங்களை முன்னிறுத்தும் பணிகளை இந்த அரசு மேற்கொள்கிறது.

சென்னை மாநகரில் முதன்முறையாக 2006ஆம் ஆண்டில் முன்னால் முதலமைச்சர், கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சி காலத்தில்தான் முதன்முறையாக சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதற்கு முன்பெல்லாம் ஏதாவது வெளிநாட்டு தலைவர்கள் வரும்போது ஏதாவது ஒரிரு இடத்தில் தான் நம்முடைய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆனால் நம்முடைய கலைகளின் மதிப்பு மரியாதையை உணர்ந்து இருப்பதால் தான் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம். இந்த கலை வடிவங்கள் அரங்குகளுக்கு மட்டுமல்ல, மக்கள் நிறைந்து காணப்படும் அனைத்து இடங்களிலும் நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படுகிறது.

இப்போது நம்மிடம் இருக்கும் கலை வடிவத்தை, அதன் நுண் வடிவத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதனால் தான் இந்த சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.எப்படி சங்கம் மருவிய காலம் இருந்ததோ, அதேபோல தான் கடந்த 10 ஆண்டுகளாக சங்கம் மருவிய காலமும் இருந்தது. அதை சரிசெய்து, மீண்டும் சங்கமம் நிகழ்ச்சியை மீட்டெடுத்து, நமது கலை வடிவங்களுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

எப்போதும் இல்லாத வகையில் கலைப்பண்பாட்டு துறைக்காக பெருமளவில் நிதியை முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கி உள்ளார். அதுவே கலைப் பண்பாட்டுத்துறை மீது அவர் கொண்டுள்ள அக்கறைக்கான சான்று. இந்த கலைச் சங்கமம் என்பது துவக்கம்தான். இன்னும் ஏராளமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள உள்ளோம் என்றார். குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் நமது பண்பாட்டு விழுமியங்கள் எதிரொலிக்கும் வகையில் இந்த சங்கமம் நிகழ்ச்சியை எடுத்துச் செல்ல வேண்டும்” என அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து, அரசினர் இசைக் கல்லூரி மாணவர்களின் பலதரப்பட்ட இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

-பரசுராமன்.ப 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

50 உழவர் சந்தைகளை சீரமைக்க 15 கோடி: 10 உழவர் சந்தைகளை அமைக்க 10 கோடி

Arivazhagan Chinnasamy

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை: பொன்முடி

EZHILARASAN D

“அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரயில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும்” – அஸ்வினி வைஷ்ணவ்

G SaravanaKumar