தமிழ்நாட்டில் மேலும் 273பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்தறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நோய் தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 273 பேர் கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர். இதில், 140 ஆண்கள் மற்றும் 133 பெண்கள் அடங்குவார்கள்.
அதிகபட்சமாக சென்னையில் 98 பேருக்கும், செங்கல்பட்டில் 28 பேருக்கும், கன்னியாகுமரி 24 பேருக்கும், கோவையில் 19 பேருக்கும், சேலத்தில் 14 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகளில் இந்தோனேசியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் என மொத்தம் 31 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,366 ஆக உள்ளது. அதே சமயத்தில் 7 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உயிரிழப்பும் ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.








