திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில் வெகு
விமரிசையாக நடைபெற்ற ஆதிபிரம்மோட்சவம் என்று அழைக்கப்படும் கோரத பெரு விழாவில் எழில் மிகு ரதத்தில் வலம் வந்த திருவரங்கன்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும்
அழைக்கப்படும் திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 28ம் தேதி
கொடியேற்றப்பட்டது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்ச்சியான கோரதம் தேரோட்டம் இன்று நடை பெற்றது. அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு தேரில் எழுந்தருளினார்.
காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடை பெற்று, பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, பெருமாளை வழிபட்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடை பெறும். ஆனால், ஆதிபிரம்மோற்சவம் என்று அழைக்கப்படும் பங்குனி மாத திருவிழாவில், நம்பெருமாள் ஜீயபுரம் சென்று வயதான பாட்டியிடம் பழைய சோறு வாங்கி உன்பது, உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் திருக்கோவிலில் கமலவல்லி தாயார் மற்றும் அரங்கநாயகி தாயாருடன் சேர்த்து சேவை செய்வது போன்ற முக்கியமான வைபவங்கள் நடைபெறும் திருவிழாவாக இந்த பங்குனி திருவிழா உள்ளது.
அந்த வகையில் பல்வேறு வைபவங்களுக்கு பின்னர் பங்குனி தேர் திருவிழா
ஸ்ரீரங்கத்தில் சிறப்பாக நடை பெற்றது. நாளை 7ம் தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பதோடு திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
ம. ஶ்ரீ மரகதம்







