விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தன செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ரூ.10 கோடியில் சிவகாசியில் பங்களா வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, “தொடர்ந்து தன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது, மக்களுக்கு உண்மை தெரியும். தொடர்ந்து தன் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தால் தொய்வடைந்து முடங்கி விடுவேன், என்னை அடக்கி விடலாம் என்ற நோக்கத்தோடு ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.
மக்கள் ஒத்துழைப்பு எனக்கு அதிகமாக இருக்கிறது. தொடர்ந்து என் மீது குற்றச்சாட்டுகளை முன் வைப்பதற்கு காரணம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயமே. எத்தனை குற்றச்சாட்டுகளை தன்மீது முன் சுமத்தினாலும் தொடர்ந்து நான் பயணித்துக் கொண்டே தான் இருப்பேன். எனது வேலைகளை நிறுத்தாமல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.
தொழில் முதலீடு அனைத்தும் ஆந்திரா சென்று விடும் என்று சொன்னவர்கள் இன்று எதுவுமே பேசுவதில்லை. ஆட்சி மீதான பயத்தின் காரணமாகவே தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. என்னை முடக்க நினைத்தால் அது நடக்கவே நடக்காது. சிவகாசி மக்கள் எனக்கு துணையாக இருக்கிறார்கள். சிவகாசியில் தான் 10 கோடியில் வாங்கியதாக கூறப்படும் பங்களாவின் முகவரையை கண்டறிவதற்கே கஷ்டப்பட்டுவிட்டோம் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு வீட்டை கண்டறிவது வேலை அல்ல. எங்களை நம்பி மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
திரும்பத் திரும்ப குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தமிழகத்தை மீண்டும் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. பாராட்ட முடியவில்லை என்றாலும் தயவுசெய்து குறை சொல்லி பொய் குற்றச்சாட்டுகளால் எங்களை முடக்க வேண்டும் என நினைக்காதீர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் இதேபோன்று தான் முடக்க பார்த்தார்கள், ஆனால் அவர் வெகுண்டு எழுந்து வந்தார், அதேபோல நாங்களும் எழுந்து வருவோம்” என்றார்.




