பயன்பாடின்றி பாழாகி வரும் 250 புதிய ஆம்புலன்ஸ்கள்; நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக டிடிவி தினகரன் அறிக்கை!

250 புதிய கால்நடை மருத்துவ நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாடின்றி பாழாகி வருவது குறித்த நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கம் ஊராட்சியின் இருளாம்பாளையம்…

250 புதிய கால்நடை மருத்துவ நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாடின்றி பாழாகி வருவது குறித்த நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கம் ஊராட்சியின் இருளாம்பாளையம் பகுதியில் 39 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட 250 புதிய கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் வாகனங்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. 1962 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் இந்த ஆம்புலன்ஸ்கள் மூலம் கால்நடைகளுக்கான சிகிச்சைகளை பெற முடியும். தற்போது இவை பயன்பாடின்றி கிடப்பதால் துருப்பிடித்து பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தரப்பில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கே இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகிய இருதரப்பிலும் தரப்பட வேண்டிய நிதி கொடுக்கப்படாததால் தான் இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாடு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. துருப்பிடிக்கும் அபாயத்தில் உள்ள 250 கால்நடை ஆம்புலன்ஸ்கள், குறித்த நியூஸ் 7 தமிழ் சேனலில் வெளியான செய்தி எதிரொலியாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/TTVDhinakaran/status/1665607871613263872

இந்த அறிக்கையில் அவர் கூறியதாவது:

கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 250 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படாமல் வெறுமனே நிறுத்தி வைத்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆம்புலன்ஸ்களில் பிரதமர் படத்தை ஒட்டுவதா அல்லது முதலமைச்சர் படத்தை ஒட்டுவதா என்ற சர்ச்சையாலும், ஆம்புலன்ஸ்களை இயக்க ஆட்கள் நியமிக்கப்படவில்லை என்பதாலும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

பால் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கக்கூடிய பசு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

மக்கள் வரிபணத்தில் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களில் யாருடைய படத்தை ஒட்டுவது என்பதை சர்ச்சையாக்காமல், அவற்றை இயக்க போதுமான ஆட்களை நியமித்து ஆம்புலன்ஸ்களை உடனே பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.”

இவ்வாறு டிடிவி தினகரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.