ஈரான் மீது கடந்த சனிக்கிழமை அன்று முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈரான் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களிலும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் போன்றவை அமெரிக்காவிற்கு ஆதரவு அளித்துள்ளன. இந்தியாவும் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்காக ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஈரான் தனது தொடர் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதலைத் தொடர்ந்தது. மத்திய கிழக்கில் போர்பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய குடியரசில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1097 ஆக அதிகரித்துள்ளது. இதில் 81 குழந்தைகளும் அடங்கும். இதைத்தவிர 100 குழந்தைகள் உள்பட 5,402 பேர் காயமடைந்து உள்ளனர்.







