நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கே சிக்கித் தவித்த தமிழர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், முதல் கட்டமாக 21 தமிழர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களும் பாதுகாப்பான முறையில் அழைத்து வரப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் மீட்கப்பட்ட 21 பேருடன் காத்மண்டுவில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்ட விமானம் 3.45க்கு டெல்லி வந்தடைந்தது.. இதனைதொடர்ந்து, நேபாளத்தில் இருந்து மீட்டு வரப்பட்ட 21 பேரிடம், தமிழர்களை மீட்டு அழைத்துவர முதலமைச்சர் விஜய் அமைத்த அமைச்சர்கள் குழு டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தனர். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு, வினோத் ஆகியோர் தப்பிப்பிழைத்து 21 தமிழர்களுடன் சந்தித்து பேசினர். தொடர்ந்து மீட்கப்பட்ட 21 பேரும் டெல்லி விமான நிலையத்தில் இருந்து, இன்று இரவு 8 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 யாத்ரீகர்களை சந்தித்தேன். அவர்களின் அனுபவங்களை நேரில் கேட்டறிந்தது நெகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. இந்த மீட்புப் பணிக்காக நேபாள ராணுவத்திற்கும், அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்தியா திரும்புவதை சுமூகமாக ஒருங்கிணைத்த காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் செயல்பாட்டைப் பாராட்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.




