வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அத்தொகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில் ஒரு தொகுதி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி என்றும், மற்றொரு தொகுதி தமிழ்நாட்டின் ராமநாதபுரமாக இருக்கக்கூடும் என்றும், பாஜக வட்டாரத்தில் இருந்து தெரியவந்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.
இத்தகவல் ராமநாதபுரம் தொகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆன்மிகத் தலங்களான காசியையும் ராமேஸ்வரத்தையும் இணைத்து வளர்ச்சி அடையச் செய்யும் பாஜகவின் நோக்கத்துக்கு ஏற்பவே ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை வரவேற்றுள்ள ராமநாதபுரம் மக்கள், இதன்மூலம் தங்கள் மாவட்டம் முன்னேறிய மாவட்டமாக வளர்ச்சி அடையும் என வரவேற்பு தெரிவித்துள்ளனர்.







