முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி : திமுகவின் திட்டம் என்ன?


இலா. தேவா இக்னேசியஸ் சிரில்

கட்டுரையாளர்

2024 மக்களவைத் தேர்தலில், முழுமையான வெற்றியை ஈட்ட இப்போது ஆளும் திமுக வியூகங்களை வகுத்து செயலாற்றி வருகிறது. திமுகவின் வியூகம் என்ன என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.

தமிழ்நாட்டில் நீண்டகால கூட்டணியாக திமுக – காங்கிரஸ் கூட்டணி  நீடித்து வருகிறது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரசுடன் மேலும் சில கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு வருகிறது திமுக. 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இஜக என பெரும் கூட்டணியுடன் களம் கண்ட திமுக தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 39 ஐ கைப்பற்றி அசத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாடாளுமன்ற கூட்டணியுடனேயே சட்டமன்ற தேர்தலையும் சந்தித்த திமுக, தமிழ்நாட்டில் 2011 & 2016 சட்டமன்ற தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு 2021 இல் ஆட்சியையும் கைப்பற்றியது. வரும் தேர்தலிலும் கூட்டணி தொடரும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து வந்தாலும், ஏற்கனவே உள்ள கட்சிகளுடன் மேலும் சில கட்சிகளையும் கூட்டணியில் இணைப்பதற்கும் ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தேர்தல் பணியில் திமுக

நாற்பதும் நமதே என கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் முழங்கிய ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தல் பணிகளையும் தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். வாக்குச்சாவடி முகவர்கள் நியமனத்தை மாவட்டச்செயலாளர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தியதுடன், அதுகுறித்து காணொலி வாயிலான ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளார். வலுவான கூட்டணி

நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியுடன் தான் போட்டி என்ற தகவலையும் டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் ஸ்டாலின். வலுவான கூட்டணிக்கான கணக்கை தொடங்கியுள்ளார் என்கிறார்கள் திமுகவின் நிர்வாகிகள். 1999, 2004, 2009 என தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் இந்தியாவை யார் ஆள வேண்டும்? என்பதை தமிழ்நாடு தீர்மானிக்கும் நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2004 இல் மத்தியில் அமைந்த அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேர் இடம்பெற்றிருந்தனர். 2009 இலும் அதுபோன்ற நிலையே காணப்பட்டது. ஆனால் அதன் பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் அதிக எண்ணிக்கையிலான இடங்களை மக்கள் அதிமுக, திமுக என மாறி மாறி பெற்ற போதிலும் அது எண்ணிக்கை என்ற அடிப்படையிலேயே இருந்தது.  2014 ஆம் ஆண்டு அதிமுக பெற்ற 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதேபோன்று 2019 இல் திமுக கூட்டணி கைப்பற்றிய 39 இடங்களால் மத்திய அரசில் பங்களிப்பைப் பெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. 

தேசிய அரசியல்

பாஜக அல்லாத முதலமைச்சர்கள் மாநாடு, அனைத்து இந்திய சமூகநீதி கூட்டமைப்பு என தேசிய அளவில் தங்களை நிலைநிறுத்தும் முயற்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். நீட் தேர்வு, இந்தி திணிப்பு, ஆளுநரின் செயல்பாடுகளுக்கான எதிர்ப்புகளும் மாநிலம் கடந்து ஆதரவு கரத்தை நீட்டி வருவதும் திமுகவிற்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அடுத்து மத்தியில் அமையும் அரசில் தாங்கள் பங்குபெற வேண்டும் என்ற முனைப்பில்தான் முதலாவதாக, அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்ற தேர்தல் பணியை திமுக தொடங்கியுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான கட்சிகளை கூட்டணியில் கொண்டிருந்தாலும், இடப்பங்கீட்டின்போது மாறுபாடுகள் எழுந்தாலும் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல்களில் இணைந்தே பயணித்து வருகிறது திமுக கூட்டணி. இந்திய ஜனநாயக கட்சி மட்டும் திமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ளது. 20க்கு மேல் உறுதி

2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தனிப்பட்ட முறையில் 20க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ள திமுக, அதற்கேற்ப கூட்டணியையும் கட்டமைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 2019 தேர்தலில் திமுக 20, காங்கிரஸ் 10 + 1 (மாநிலங்களவை), மார்க்சிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, விடுதலை சிறுத்தைகள் 2, மதிமுக 1 + 1 (மாநிலங்களவை), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி 1, இந்திய ஜனநாயக கட்சி 1 என்ற எண்ணிக்கையில் களம் கண்டது. கொமதேக, மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றனர். 

இணையும் கட்சிகள்?

திமுக கூட்டணியில் மேலும் 2, 3 கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். கூட்டணி விரிவாக்கம் குறித்த ஆலோசனைகளின் வெளிப்பாடே இந்த கருத்து என கூறினாலும், திமுக வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

திமுக தரப்பில் பாமக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக கட்சிகளுடன் நம் தமிழர் கட்சியையும் கூட்டணியில் இணைவதற்கு முன்வந்தால் இணைக்கலாம் என கருதுவதாகக் கூறப்படுகின்றது. பாஜக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் பாமக, மநீம இணையும் என்ற எண்ணங்கள் இருந்தாலும் இதுவரை கூட்டணி அமைத்தே போட்டியிடாத நாம் தமிழர் கட்சி முன் வருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

எண்ணிக்கை ஏற்கப்படுமா?

கடந்த தேர்தலில் அளித்த 10 இடங்களை விட 3 இடங்கள் காங்கிரசுக்கு குறைத்து 7 இடங்கள், இந்திய ஜனநாயக கட்சியின் ஒரு இடம், மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களிலும் எண்ணிக்கையை குறைத்து கூட்டணியில் இணைய முன்வரும் கட்சிகளுக்கு அளிக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்து மத்தியில் ஆள வேண்டும் என்ற முனைப்பில் உள்ள காங்கிரஸ், 10க்கு குறைந்து ஏற்றுக்கொள்ளாத நிலையும், வைத்திருக்கும் இடங்களை குறைத்துக்கொள்ள மற்ற கட்சிகளும் முன்வராத நிலையும், மாறுபட்ட கருத்துகளையுடைய கட்சிகளை ஒன்றாக பயணிக்க வைப்பதிலும் சவால்கள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

1996 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரையில் மத்தியில் அமைந்த ஆட்சியில் பங்கேற்ற கட்சியான திமுக, மூன்று கூட்டணிகளிலும் செயல்திட்டங்களின் அடிப்படையில் இடம்பெற்றது. அதுபோன்ற செயல்திட்டங்களை உருவாக்கினால், கூட்டணி பலமாவதுடன், மத்தியில் அமையும் ஆட்சியில் பங்குபெறலாம் என கருதலாம்.

வியப்பின் களம்

நடிகர் விஜயின் அரசியல் எதிர்பார்ப்பு, கடைசி நேர கூட்டணி கருத்து மாறுபாடுகள், எதிர் அணியின் கூட்டணி நிலை, அரசியல் களச் சூழல் போன்றவை தேர்தல் நேரத்தில் கருத்தில் கொள்ள வேண்டியதாகவுள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும் கூட்டணியில் இணைப்பையும், வெளியேற்றத்தையும் இடப்பங்கீட்டு பேச்சுவார்த்தைகளின்போது காணமுடிகின்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு 15 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், அரசியல் களம் நிச்சயம் வியப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்…

  •    இலா. தேவா இக்னேசியஸ் சிரில் @Deva_icl
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

50% பயணிகளுடன் நாளை காலை 6 மணி முதல் சென்னையில் பேருந்துகள் இயக்கம்: மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

Halley Karthik

கலைஞரின் ‘வருமுன் காப்போம்’ திட்டம்; தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

G SaravanaKumar

குரூப் 4 தேர்வு; வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேர்வர்கள்

G SaravanaKumar